ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசிய வழக்கில் அ.ம.மு.க. பிரமுகர் கைது உறவினர்கள் சாலை மறியல்

போடி அருகே ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல் வீசிய வழக்கில் அ.ம.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.

Update: 2021-04-08 14:00 GMT

போடி:
சட்டசபை தேர்தல் நாளான கடந்த 6-ந்தேதி, தேனி எம்.பி. ரவீந்திரநாத் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட வந்தார். அப்போது திடீரென சிலர் அவரது கார் மீது கல்வீசினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. 
இது குறித்து எம்.பி.யின் கார் டிரைவர் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அ.ம.மு.க. பிரமுகர் கைது
இந்தநிலையில் எம்.பி. கார் மீது கல்வீசிய சம்பவம் தொடர்பாக பெருமாள் கவுண்டன்பட்டியை ேசர்ந்த அ.ம.மு.க. பிரமுகரான மாயி (வயது 58) என்பவரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். இந்தநிலையில் மாயி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் பெருமாள் கவுண்டன்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் போடி தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் சுமார் அரை மணி நேரம் நடந்த சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  
இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அ.ம.மு.க தேனி மாவட்ட செயலாளர் முத்துசாமி கூறுகையில், இந்த பிரச்சினைக்கு சரியான முறையில் தீர்வு எடுக்கப்படாவிட்டால் அறவழியில் போராட்டம் நடைபெறும் என்றார். 

----

மேலும் செய்திகள்