தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Update: 2021-04-08 14:04 GMT
தூத்துக்குடி :
தூத்துக்குடியில் மீன்பாடு இல்லாததால் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
விசைப்படகுகள்
தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. விசைப்படகுகள், இழுவைப்படகுகள் தடை காலத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தடைக்காலம் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தருவைகுளம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மீனவர்கள், வியாபாரிகள், மீன்சார்பு தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் கடந்த 1ந் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
தற்போது மீன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. இதனால் டீசல் மற்றும் பராமரிப்பு செலவுக்கே கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் ஏற்கனவே கரையில் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளன.
கடலுக்கு செல்லவில்லை
மேலும், மீன்பிடி தடைகாலம் விரைவில் தொடங்க உள்ளதாலும், மீன்பாடு இல்லாத காரணத்தாலும் தூத்துக்குடியில் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. 250- க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பகல் மற்றும் இரவு நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தடைக்காலம் தொடங்கும் முன்னரே விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக மீன்கள் விலை அதிகரிக்கும் நிலை உள்ளது.

மேலும் செய்திகள்