அதிகரித்து வரும் கொரோனா விழுப்புரத்தில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பு

அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2021-04-08 15:47 GMT
விழுப்புரம்,


தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத்தொடங்கியது. தொடர்ந்து, படிப்படியாக கொரோனா நோய் தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக இந்த வைரஸ் நோய் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் மீண்டும் கொரோனா 2-வது அலை உருவாகிறதா? என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்நோய் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பழையபடி மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அபராதம்

இந்த சூழலில் நேற்று கொரோனா பரவலை தடுக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதோடு காய்ச்சல் முகாம்களை அதிகரித்து கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விழுப்புரம் நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் ரமணன், செல்வராஜ், திண்ணாயிரமூர்த்தி, மேற்பார்வையாளர் இளங்கோ உள்ளிட்டோரும், போலீசாரும் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது ஒரு அடையாளத்திற்காக இன்றைய தினம் (நேற்று) முக கவசம் அணியாமல் வந்த 23 பேருக்கு மட்டும் அபராதம் விதித்து அவர்களிடமிருந்து ரூ.4,600 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். இதுசம்பந்தமாக அவ்வப்போது ஒலிப்பெருக்கியிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான பகுதியில் கட்டுப்பாடுகளும் பழையபடியே தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. மக்கள் பயன்பாட்டுக்காக சானிடைசர் திரவத்தையும் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்