குடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் செய்த 20 காட்டுயானைகள்

குடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் செய்த 20 காட்டுயானைகள் விடிய விடிய விரட்டியடிக்கப்பட்டன.

Update: 2021-04-09 16:31 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர மாநில எல்லையையொட்டி வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித்திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஆந்திர மாநிலம் யாதமுரி, காசிராலா பகுதியில் முகாமிட்டு இருந்த 20 காட்டுயானைகள் 3 குழுக்களாகப் பிரிந்து தனகொண்டபல்லி, குடிமிபட்டி, சைனகுண்டா, ஆம்பூராம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பார்க்கவதேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணாபாபு தலைமையில் வனவர்கள் முருகன், மாசிலாமணி, நேதாஜி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உதவியோடு நேற்று முன்தினம் இரவு காட்டுயானைகளை பட்டாசு வெடித்தும், மேளம்  அடித்தும் விடிய விடிய ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

அதேபோல் வேலூர் சரகத்துக்கு உட்பட்ட பகுதியான பனமடங்கியை அடுத்த கருப்புகெட்டை பகுதியில் 10 காட்டுயானைகள் நேற்று முன்தினம் இரவு முகாமிட்டு இருந்தன. அந்த காட்டுயானைகள் குடியாத்தம் வனப்பகுதியில் நுழையலாம் எனத் தெரிகிறது. இதனால் வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியில் உள்ளனர். கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தண்டோரா போட்டும், துண்டு பிரசுரம் வழங்கி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

தமிழக வனப்பகுதியில் இருந்து விரட்டியடிக்கும் காட்டுயானைகளை ஆந்திராவில் உள்ள வேட்டை தடுப்பு காவல் குழுவினர் மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு விரட்டியடிக்கின்றனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் இரவில் காட்டுயானைகள் தங்கி விட்டு மீண்டும் தமிழக வனப் பகுதிக்குள் வருகின்றன. 

தமிழக அரசு, காட்டுயானைகளை விரட்ட சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவல் குழுவை அமைக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேட்டை தடுப்பு குழுக்களை வரவைத்து இங்கு அட்டகாசம் செய்து வந்த காட்டுயானைகளை விரட்டியடித்தனர். அதேபோல் தற்போதும் செய்ய வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்