தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 461 பேருக்கு அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 461 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-10 13:18 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 461 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

முககவசம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன்படி, முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்திட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களுக்கு முககவசம் அணியாமல் வருபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். 

அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத 572 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 212 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 258 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 200 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 261 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 401 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 387 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 170 பேர் மீதும் என மொத்தம் 2 ஆயிரத்து 461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வகையில், தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 14 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 6 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 பேர் மீதும் என மொத்தம் 52 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எந்தெந்த வழிகளில் எல்லாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அத்தனை வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சிலர் அதனை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு செயல்படுவதால் இதன் தாக்கம் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வதற்கான வாய்ப்புள்ளது. 

எனவே பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து, முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் அபராதம் செலுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்