கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் முன்பு தடுப்பு கட்டைகள் அமைப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் முன்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-10 15:20 GMT
கடலூர், 

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த தெருக்களுக்குள் வெளிநபர்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு வந்தது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 7.9.2020 அன்று 135 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாதவாறு தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு, பாதைகள் அடைக்கப்பட்டன.

கட்டுப்பாட்டு பகுதிகள்

அதன் பிறகு மாநில அரசுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இதனால் கட்டுப்பாட்டு பகுதிகளில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி கைவிடப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருந்து வந்தது. இதனால் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் முற்றிலும் இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்தது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை

இதனால் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும் ஒரே தெருவில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் முன்பு தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

கட்டைகள் கட்டும் பணி

அந்த வகையில் கடலூர் நகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் நேரு வீதி, வ.உ.சி. வீதி, வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம் ஜங்ஷன் ரோடு, திருப்பாதிரிப்புலியூர் குணசுந்தரி நகர் ஆகிய பகுதியில் வசிக்கும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் முன்பு தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு, அது தடை செய்யப்பட்ட பகுதி என்று அச்சடிக்கப்பட்ட பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சி பகுதியில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் முன்பு தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்