முக கவசம் அணியாமல் வந்த 1,216 பேருக்கு அபராதம்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 1,216 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-10 16:00 GMT
விழுப்புரம், 

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் அபராதம் வசூலித்தனர். மாவட்டம் முழுவதும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் அபராதம் வசூலித்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை விழுப்புரம் உட்கோட்டத்தில் 291 பேருக்கும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 135 பேருக்கும், செஞ்சி உட்கோட்டத்தில் 52 பேருக்கும், கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 88 பேருக்கும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வந்த 566 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200 அபராத தொகை வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று இரவு வரை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை 

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 8, 9-ந் தேதிகளில் மட்டும் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வந்த 650 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதுபோல் சமூக இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் 5 பேரிடம் இருந்து தலா ரூ.500 வீதம் ரூ.2,500 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கடந்த 3 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 1,216 பேரிடம் அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றும் வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றனர். 

மேலும் செய்திகள்