முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூல் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் சென்னையில் நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது.

Update: 2021-04-11 12:34 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் சென்னையில் நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

அந்தவகையில் சென்னையில் முறையாக முககவசம் அணியாதவர்களிடம் ரூ.200-ம், பொதுஇடங்களில் எச்சில் துப்புதல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் தலா ரூ.500-ம், வணிகவளாகங்கள், கடைகள், முடித்திருத்தும் நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் அந்த நிறுவனம் அல்லது கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். வணிக வளாகங்கள், கடைகள் உள்பட பொது இடங்களில் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவர்களிடம் ஏன்? எதற்கு? என்ற கேள்வியை கேட்பதற்கு முன்பாகவே அதிரடியாக அபராத தொகையை வசூலித்து, ரசீதை கையில் கொடுத்துவருகின்றனர்.

அதேபோல் பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல், நிறுவனங்களில் சோதனை செய்த அதிகாரிகள், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்ததாக ஜவுளிக்கடை உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் உள்பட மற்ற கடைகளில் இருந்து மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக திரு.வி.க.நகர் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்