கொரோனா தொற்று அதிகரிப்பு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்தது

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்தது.

Update: 2021-04-12 05:19 GMT

வெறிச்சோடியது

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வழிபாட்டுத்தலம், சுற்றுலா தலங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஞாயிற்றுகிழமைகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. மாணவ-மாணவிகளையும் காண முடியவில்லை. அரசு விதித்துள்ள தடையால் கடற்கரை பகுதிக்கு செல்லவும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கடற்கரைக்கு செல்ல முயன்ற பயணிகளுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

பார்வையாளர் கட்டண மையங்கள்

குறைவான பயணிகளே அனைத்து புராதன சின்னங்களிலும் வந்திருந்தனர். அவர்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே சென்று புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா தொற்று பரவும் சூழல் உள்ளதால் கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் நுழைவு வாயிலில் உள்ள பார்வையாளர் கட்டண மையங்கள் மூடப்பட்டன. மொபைல் செயலி மூலம் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்தவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் இருந்து மாமல்லபுரத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் கூட பயணிகள் கூட்டம் இல்லாததால் பல பஸ்கள் இருக்கை காலியாகவே பயணிகள் இன்றி இயங்கின.

போதிய பயணிகள் வரத்து இல்லாததால் சுற்றுலா வழிகாட்டிகளும் போதிய வருமானம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோல் ஷேர் ஆட்டோ டிரைவர்களும் போதிய வருமானம் கிடைக்காமல் திண்டாடினர். அதேபோல் பயணிகள் வரத்து இல்லாததால் சாலையோர கடைகளிலும் வியாபாரம் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்