விழுப்புரம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் மயக்கம் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விழுப்புரம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் சாதுர்யமாக பஸ்சை சாலையோரமாக நிறுத்தியதால் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2021-04-12 16:44 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள சங்கீதமங்கலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் மதியழகன் (வயது 50) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ், விழுப்புரத்தை அடுத்த பூத்தமேட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவர் மதியழகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு  உண்டாகி மயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் சாதுர்யமாக பஸ்சை இயக்கி சாலையோரமாக நிறுத்தினார். அதன் பின்னர் அவர், அந்த இருக்கையிலேயே மயங்கினார்.
உடனே இதுகுறித்து பஸ் பயணிகள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து டிரைவர் மதியழகனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.
அதன் பிறகு மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு அந்த பஸ், பூத்தமேட்டில் இருந்து விழுப்புரம் புறப்பட்டுச்சென்றது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்