தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் கோவில் விழாக்களை நடத்த கோரிக்கை

தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-04-12 19:59 GMT
தென்காசி:
தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கோவில் விழாக்களுக்கு தடை

தற்போது நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக கோவில் விழாக்களுக்கு தடை விதித்துள்ளது.
இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 100-க்கும் மேற்பட்டவர்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்களை அங்கிருந்து போலீசார் கூட்டம் போடக்கூடாது என திருப்பி அனுப்பினர். அவர்கள் அனைவரும் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் அருகில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் நையாண்டி மேள கிராமிய கலைஞர்கள் நலச்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் உமையார் பாகம் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

ரூ.10 ஆயிரம் நிவாரணம்

அந்த மனுவில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பாதிப்பினால் தங்களது தொழில் நடைபெறாமல் மிகவும் வறுமையில் உள்ளோம். இந்த ஆண்டும் கோவில் விழாக்களை நடத்தாவிட்டால் எங்கள் நிலைமை மேலும் மிக மோசமாகிவிடும். எனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் கோவில் விழாக்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

 அவ்வாறு அனுமதி மறுத்தால் நிவாரணமாக அனைவருக்கும் ரூ.10,000 வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்