ஈரோடு பஸ் நிலைய கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பீடி-சிகரெட்டுகள் பறிமுதல்; ஆணையாளர் இளங்கோவன் நடவடிக்கை

ஈரோடு பஸ் நிலைய கடையில் அனுமதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பீடி-சிகரெட்டுகள் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-12 22:37 GMT
ஈரோடு
ஈரோடு பஸ் நிலைய கடையில் அனுமதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பீடி-சிகரெட்டுகள் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்பேரில் பறிமுதல் செய்யப்பட்டது. 
ஆணையாளர் ஆய்வு
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றி வருகிறார்கள்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது, போதிய இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமி நாசினி பயன்படுத்துவது, சானிடைசர் பயன்பாடு குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று காலை ஆணையாளர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பீடி-சிகரெட் பறிமுதல்
போக்குவரத்துக்கழக பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களில் ஏற்றப்படும் பயணிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதையும் பார்வையிட்டனர். மேலும் பஸ் நிலையத்தில் முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார்.
பின்னர் அங்கிருந்த சில கடைகளில் ஆணையாளர் இளங்கோவன் சோதனை மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்த அனுமதி பெற்ற ஒருவர் பீடி-சிகரெட்டுகள் வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதி இல்லாமல் வைத்து விற்பனை செய்யப்பட்ட பீடி-சிகரெட்டுகளை பறிமுதல் செய்ய ஆணையாளர் உத்தரவிட்டார். உடனடியாக அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் பஸ் நிலையத்தில் கேன் டீ விற்பனை செய்ய அரசின் நிதி உதவி பெற்று தொழில் செய்து வருகிறார். அவர் டீ மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும். பீடி-சிகரெட் மற்றும் வேறு பொருட்கள் விற்க அவருக்கு அனுமதி இல்லை. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்