சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்.

Update: 2021-04-13 11:36 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் வழியாக சார்ஜாவுக்கு விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐதராபாத் வழியாக சார்ஜா செல்லும் பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் செல்ல வந்த சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கற்பகம் (வயது 40) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் தெர்மாகோல் பெட்டி இருந்தது.

சந்தேகத்தின் பேரில் அந்த பெட்டியை பிரித்து சோதனை செய்தனர். அதில் பெட்டிக்குள் உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கற்பகத்தை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த மொய்தீன் (45) என்பவர்தான் இந்த பார்சலை கொடுத்ததாக கூறினார். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த மொய்தீனையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்