குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியரை இடமாற்றம் செய்ததை களங்கப்படுத்தியதாக கூற முடியாது ஐகோர்ட்டு கருத்து

குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியரை பணியிடமாற்றம் செய்ததை, களங்கப்படுத்தியதாக கேள்வி எழுப்ப முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-13 11:50 GMT
சென்னை, 

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் சீனிவாசன். இவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து, வக்கீல்கள் வாதத்துக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாட்சிகளை கலைக்க கூடும் என்ற அடிப்படையில், சீனிவாசனை சேலத்தில் இருந்து திருப்பூருக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சீனிவாசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

களங்கம்

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் சாட்சியை கலைத்து விடுவார் என்று கூறுவது கற்பனையே. இதன் அடிப்படையில் இடமாற்றம் செய்து மனுதாரருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், “நிர்வாக அடிப்படையில் மட்டுமே மனுதாரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கூற முடியாது” என்று வாதிட்டார்.

கேள்வி எழுப்ப முடியாது

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், “குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு பதிலாக இடமாற்றம் செய்யலாம் என்றும், அந்த நடவடிக்கையை களங்கமாக கருத முடியாது என்றும் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. நம்பிக்கை மோசடி மற்றும் குற்ற வழக்கில் தொடர்பு போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களை பணிமாற்றம் செய்யலாம்.

அதை களங்கம் விளைவிப்பதாக கருதி கேள்வி எழுப்ப முடியாது. மனுதாரருக்கு எதிரான வழக்கை மே மாதம் இறுதிக்குள் விசாரித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்