தனிமைப்படுத்தப்பட்ட 57 இடங்களில் சாலைகள் மூடல்

ஊட்டி நகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 57 இடங்களில் சாலைகள் தகரம் வைத்து மூடப்பட்டன.

Update: 2021-04-13 15:41 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஊட்டி நகராட்சியில் கொரோனா உறுதியான நபர்கள் வசித்து வந்த தெருக்கள், வீடுகள் தகரம் கொண்டு மூடப்பட்டு வருகிறது. அங்கு வசிப்பவர்கள் அனுமதி இல்லாமல் வெளியே வரக்கூடாது. வெளியாட்கள் உள்ளே செல்லக்கூடாது. 14 நாட்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு அரசு தெரிவித்த வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.

தகரம் வைத்து அடைப்பு

ஊட்டியில் ஆரணி ஹவுஸ், வண்டிச்சோலை, கிளன்ராக் காலனி, காந்தல், தமிழகம் ரோடு, அருள் நகர், ரோஸ்மவுண்ட், சர்ச்ஹில், ஹில்பங்க் உள்பட 57 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் யாரும் செல்லாத வகையில் சாலையை தகரத்தை கொண்டு அடைத்து மூடி உள்ளனர். 

மேலும் முழு பாதுகாப்பு கவச உடையணிந்து கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடர் போட்டும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதியானால் அப்பகுதி தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:- கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசு தெரிவித்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி, அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் பரவலை தடுக்க முடியும். கட்டாயம் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை தொடர்ந்து பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும்.

கொரோனா பாதித்தவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று உறுதியான நபர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்