பழனியில் தக்காளி விலை வீழ்ச்சி

பழனியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-04-13 16:13 GMT
பழனி:
பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி, கத்திரி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் பழனி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்காளி, பழனி சத்யாநகர் பகுதியில் உள்ள மண்டிக்கும், உழவர்சந்தைக்கும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 
இந்தநிலையில் விளைச்சல் அதிகமாக உள்ளதால் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, பழனி பகுதியில் சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.4 முதல் ரூ.6 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மொத்த மண்டியில் ரூ.3 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பலரும் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பழனி பகுதியில் தக்காளி சேமித்து வைக்கும் குளிர்பதனகிடங்கு அமைக்க வேண்டும், தக்காளியில் இருந்து மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்கும் ஆலை தொடங்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்