தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு உள்ளது சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2021-04-16 12:42 GMT
சென்னை, 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.35 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது ஒரு இயற்கை பேரிடர். எனவே பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிய வேண்டும்.

சென்னை, கோவையில் கொரோனா பரிசோதனை மையத்துக்கு வரும் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை, படுக்கைகள் காலியாக இருக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தனி கட்டுப்பாட்டு மையம், சென்னையில் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தயார் நிலையில் உள்ள படுக்கைகளில், 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே கொரோனா நோயாளிகள் உள்ளனர். சென்னையில் 20 சதவீத படுக்கைகளில் மட்டுமே தற்போது தொற்றுள்ள நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

போதுமானஅளவு மருந்து

குறைவான கொரோனா நோயாளிகள் வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட நிரப்பப்படும் படிவத்தை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடுப்பூசி திருவிழா மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து அவசர கால உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து மட்டுமல்ல அனைத்து மருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்