வேதாரண்யம் பகுதி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு

வேதாரண்யம் பகுதி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தடுப்பூசி இல்லை என ஊழியர்கள் கூறியதால் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-16 14:48 GMT
வேதாரண்யம், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் அதிகாரிகள் நோய் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கோவி சீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பு ஊசி மருந்துகளை தமிழகம் முழுவதுமுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வருகிறது. இந்தநிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள கரியாப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு உள்பட அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

2 நாட்களில்...

இதனால் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போட முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்களிடம் ஊசிமருந்து கைவசம் இல்லை என்றும், இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வந்து விடும் என்றும் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். எனவே கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி மருந்தை அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்குவாதம்

நேற்று வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையில் தடுப்பு ஊசி போட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இவர்களுக்கு முதலில் தடுப்பு ஊசி இல்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வர வைக்கப்பட்டு 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தடுப்பூசி இருப்பு இல்லை என கூறி டோக்கன் வழங்கி நாளை வாருங்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர் இதனால் ஊசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்