மீன்பிடி தடைக்காலம், கொரோனா 2-வது அலையால் நாகை மாவட்டத்தில் ஒரு நாளில் ரூ.5 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

மீன்பிடி தடைக்காலம் மற்றும் கொரோனா 2-வது அலையால் நாகை மாவட்டத்தில் ஒரு நாளில் ரூ.5 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 லட்சம் பேருக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-04-16 15:21 GMT
நாகப்பட்டினம்,

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்திலும் சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மீனவ கிராமங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது.

நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், நாகூர், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 64 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

வரத்து குறைவு

மீன்பிடிதடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டுவந்து, படகில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்குவது, துருப்பிடித்த பகுதிகளை வெல்டிங் வைத்து சரி செய்வது, வர்ணம் தீட்டுதல் வலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் குறைந்த தூரம் சென்று தொழில் செய்யும் பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் நாகையில் மீன்வரத்து குறைந்துள்ளது.

வர்த்தகம் பாதிப்பு

இதனால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் மற்றும் அதை சார்ந்த பிற தொழில்களில் ஈடுபடும் 1 லட்சம் பேருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா 2 -வது அலையால் போடப்பட்ட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளால், தடை காலத்தில் நடக்கும் பைபர் படகு மீன்பிடி தொழிலும், வருங்காலத்தில் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கும் சூழல் ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ. 5 கோடி வர்த்தகம் பாதிப்பு

நாகை மாவட்டத்தில் ஒரு நாளில் ரூ.5 கோடிக்கு மீன்வர்த்தகம் நடைபெறும். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக பன்னாட்டு மீன் ஏற்றுமதி முற்றிலும் தடை செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து மாநிலத்துக்குள் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் தடைபட்ட ஏற்றுமதி சற்று உயிர் பெற்று மீண்டும் நடந்து வந்தது. இந்த நிலையில் மீன்பிடி தடை காலம், வேகமாக உருவெடுக்கும் கொரோனா வின் 2-வது அலையால் போடப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகள் போன்றவற்றால் மீன்பிடித்தொழில் மீண்டும் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

வட்டி இல்லா கடன்

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார் கூறியதாவது:-

மீன்பிடி தடைக்காலத்தில் தொழில் முடக்கம் ஏற்படுவதால் நிவாரணமாக ரூ.5 ஆயிரம் அரசு வழங்குகிறது. ஆனால் இந்த தொகை தற்போதைய விலைவாசி ஏற்றத்திற்கு கட்டுபடி ஆகாது. எனவே இந்த நிவாரணத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த தொகையை மீன்பிடி தடைக்காலத்தில் வழங்க வேண்டும். மேலும் படகுகளை பராமரிக்க கடல் மீனவர் கூட்டுறவு சங்கம் வாயிலாக குறைந்தது ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்க வேண்டும். மேலும் மீன்பிடித் தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கு நலவாரிய மூலம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்