மத்தூர் அருகே குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மத்தூர் அருகே, குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-16 16:04 GMT
மத்தூர்:
மத்தூர் அருகே, குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெருகோபணபள்ளி ஊராட்சி  அண்ணா நகரில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்து வந்தது.
குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா். இதையடுத்து குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி நேற்று காலை காலிக்குடங்களுடன் மத்தூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், பெருகோபணபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முரளி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து  பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்