விழுப்புரத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 27 கடைகளுக்கு அபராதம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 27 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2021-04-17 16:03 GMT

விழுப்புரம், 

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நோய் பரவல் வேகமெடுத்துள்ளது. இந்நோய் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்து வருவதால் அவர்களை அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டுபிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
மேலும் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வருதல் வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியே பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், கடைகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சானிடைசர் திரவம் வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று வணிகர்களுக்கும் அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ரமணன் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் நேருஜி சாலை, திருச்சி மெயின்ரோடு, கிழக்கு புதுச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது டீக்கடை, ஜூஸ் கடைகள், பழக்கடைகள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடி என 25 கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் வசூலித்தனர்.
மேலும் விழுப்புரம்- திருச்சி மெயின்ரோட்டில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வரும் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் இருந்ததோடு சமூக இடைவெளியையும் பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

அபராதம்

இதுதவிர விழுப்புரம்- திருச்சி மெயின்ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையை நேற்று முன்தினம் இரவு பூட்டும்போது அந்த கடையில் இருந்து சேர்ந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் அருகில் உள்ள காலிமனையில் கொட்டி வைத்திருந்தனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மதிக்காமல் அலட்சியத்துடன் பொதுஇடத்தில் குப்பைகளை கொட்டியுள்ளதால் நோய் தொற்று பரவலுக்கு காரணமாகக்கூடும் என்று கருதி அந்த செல்போன் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்