கள்ளக்காதலை கண்டித்த விவசாயி படுகொலை

கள்ளக்காதலை கண்டித்த விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-17 18:20 GMT
இளையான்குடி.

கள்ளக்காதலை கண்டித்த விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி படுகொலை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அதிகரை நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கரிகாலன்(வயது 45). விவசாயி.
இவர் தனது தென்னந்தோப்பில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். தினமும் இரவு உணவு முடித்து விட்டு தென்னந்தோப்புக்கு சென்று ஆடு, மாடுகளை காவல் காப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கரிகாலன் உணவு சாப்பிட்டு விட்டு தென்னந்தோப்புக்கு சென்றார்.
நேற்று காலை வெகுநேரமாகியும் கரிகாலன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி தென்னந்தோப்புக்கு சென்றனர். அப்போது அங்கு கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இது தொடர்பாக கரிகாலனின் அண்ணன் அன்புசெல்வம் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் சிவதுரை முருகன் என்பவர் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாகவும், அதை கரிகாலன் தட்டி கேட்டதால் கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறி இருந்தார்.
இதற்கிடையே கொலை நடந்த இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு பால்பாண்டி, இளையான்குடி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட கரிகாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக அதிகரை நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவதுரைமுருகன் (35) அவருடைய தம்பி நவநீதகிருஷ்ணன்(33), குமாரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் யுவராஜ்(32), நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமார் மனைவி பத்மா(35), சண்முகம் மகன் சுரேஷ் (25) ஆகியோர் மீது இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் சிவதுரை முருகன், யுவராஜ், பத்மா ஆகிய 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்