நீடாமங்கலம் பகுதியில் விளைநிலங்கள் பாசன வசதி பெற ஆறுகளை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதியில் விளை நிலங்கள் பாசன வசதி பெற ஆறுகளை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-04-18 18:21 GMT
நீடாமங்கலம், 

கல்லணையிலிருந்து பிரிந்து வரும் பெரிய வெண்ணாறு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு (கோரையாறுதலைப்பு) என்ற இடத்தை வந்தடைகிறது. அங்கிருந்து பெரிய வெண்ணாற்று நீர் .பாமனியாறு, கோரையாறு, சிறியவெண்ணாறு என 3 ஆறுகளாக பிரிந்து செல்கிறது.

இதில் பாமனியாற்றிலிருந்து 38ஆயிரத்து,357 ஏக்கரும், கோரையாற்றிலிருந்து 1லட்சத்து20 ஆயிரத்து957 ஏக்கரும், சிறிய வெண்ணாற்றிலிருந்து 94 ஆயிரத்து 219 ஏக்கரும் பாசனவசதி பெறுகிறது. மேட்டூரில் திறக்கப்படும் நீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து பெரிய வெண்ணாற்றிலிருந்து மூணாறு தலைப்பு அணையை அடைந்து நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு பாசனத்துக்கு அளிக்கப்படுகிறது.

நாணல்

இந்த ஆறுகளில் பாமனியாற்றில் சித்தமல்லி, ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல இடங்களிலும், கோரையாற்றில் ஒரத்தூர், பெரியார்தெரு, கொத்தமங்கலம், முல்லைவாசல், கண்ணம்பாடி, காரிச்சாங்குடி, கீழாளவந்தச்சேரி, கருவேலங்குளம் உள்ளிட்ட பல இடங்களிலும், சிறிய வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, பாப்பையன் தோப்பு, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆறுகளில் திருடப்படும் மணல் காரணமாக நடுஆறுகளில் திட்டு திட்டாக மேடு விழுந்து நாணல், மரங்கள் வளர்ந்து வருகிறது.

மணல் திருட்டு

இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆறுகளில் நிரம்பியிருந்த மணல் திருடப்பட்டு சுக்கான் கல் தெரிகிறது.

இதனால் ஆறுகள் கீழேயும், பாசனவாய்க்கால் மேலேயும் உள்ளதால் பாசனத்துக்கு சரியாக தண்ணீர் பாயவில்லை .தண்ணீர் ஏரி பாயாததால் பாப்பையன்தோப்பு, பெரியார்தெரு, கண்ணம்பாடி, கருவேலங்குளம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டு சில அணைகள் பயனில்லாமல் உள்ளது.

ஆண்டு தோறும் பொதுப்பணித்துறையினர் ஆறுகளை சில இடங்களில் எந்திரம் மூலம் தூர்வாருகின்றனர். இருப்பினும் திட்டு ஏற்பட்டு வருகிறது.

எனவே அதிகாரிகள் மணல் திருட்டை கட்டுப்படுத்தி, ஆறுகளை தூர் வாரி தடுப்பணைகளை உயர்த்தி கட்டினால் தான் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை முழுமையாக சாகுபடி செய்யலாம் என விவசாயிகள் கூறுகிறார்கள். 

மேலும் செய்திகள்