மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Update: 2021-04-21 01:10 GMT
 மாமல்லபுரம், 

தமிழகத்தில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தமிழக அரசு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா தலங்களில் பயணிகள் அதிகம் கூடுவதால் நோய் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால் மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களையும் அருங்காட்சியகங்களையும் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா தலங்களில் உள்ள கடற்கரைகளையும் பொதுமக்கள் கூடாத வகையில் மூட உத்தரவிட்டுள்ளது.

போலீசாருடன் ஆய்வு

இந்த நிலையில் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீஸ் துறையினருடன் சென்று ஆய்வு செய்தார். மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்ற போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை கோவிலின் தெற்கு, வடக்கு பக்க கடற்கரை முழுவதும் நடந்து சென்று பார்வையிட்டு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். தடையை மீறி கடற்கரைக்கு வரும் பொதுமக்களை தடுக்கும் வகையில் அனைத்து பாதைகளையும் தடுப்புகள் வைத்து அடைக்குமாறும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்துமாறும் மாமல்லபுரம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதேபோல் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் இரவு நேர ஊரடங்கையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் முக்கிய இடங்களில் தடுப்புகள் வைத்து வாகன தணிக்கையை தீவிரப்படுத்துமாறு ரோந்து போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை இ-பாஸ் அனுமதி பெற்று வந்த வாகனமா? என சோதனை நடத்த வேண்டும் என்றும் போலீசுக்கு அவர் உத்தரவிட்டார். மாமல்லபுரத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை பகல், இரவு நேர ஷிப்டு முறையில் அவர்கள் பணியாற்ற பரிந்துரைத்தார்.

கடைகளுக்கு அத்திய பொருட்கள் வாங்க செல்லும் மக்களை அவர்கள் முக கசவம் அணிந்து செல்கின்றனரா? என கண்காணித்தும், சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் பொருட்கள் வாங்குகின்றனரா? என பார்த்து ஆய்வு செய்யுமாறும் விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் போலீஸ் துறையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார். கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் தங்கள் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு முக கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

அவருடன் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்