வேப்பூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

வேப்பூர் அருகே மாவு மில்லுக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-21 16:40 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் நல்லதம்பி (வயது 45). இவர் தனது ஊரில் மாவு மில் கட்டி இருந்தார். அந்த மில்லுக்கு மின் இணைப்பு கேட்டு அடரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

இதை விசாரித்த மின்வாரிய வணிக ஆய்வாளர் ரவி என்கிற ரவிச்சந்திரன், மின் இணைப்பு கொடுக்க வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று நல்லதம்பியிடம் கேட்டதாக தெரிகிறது. 
அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்தார். பின்னர் அவரிடம் பேரம் பேசி ரூ.5 ஆயிரம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நல்லதம்பி இது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்துடன் நல்லதம்பி அடரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்த ரவியிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்து கண்காணித்த துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின்ராஜாசிங் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்