சிறுவர்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட வழக்கு ஈரோட்டில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை

சிறுவர்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட வழக்கு தொடர்பாக ஈரோட்டில் மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர்.

Update: 2021-04-21 20:11 GMT
சிறுவர்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட வழக்கு தொடர்பாக ஈரோட்டில் மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
புஞ்சைபுளியம்பட்டி சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 44). இவருடைய மனைவி ரஞ்சிதா (37). இவர்களுடைய மகன்கள் தீபக் (15), கிஷாந்த் (6). ராமலிங்கம், ரஞ்சிதா மற்றும் 2-வது மனைவி இந்துமதி (34) மற்றும் இந்துமதியின் தோழி தனலட்சுமி என்கிற சசி (38) ஆகியோர் கூட்டு சேர்ந்து தீபக், கிஷாந்த் இருவரையும் படிக்க விடாமல் வீட்டு வேலைகளை செய்ய வைத்தும், சூடு போட்டும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
மேலும் தனலட்சுமி சிவனாக வேடமிட்டும், ரஞ்சிதா சக்தியாக வேடமிட்டும் இரவு நேரத்தில் பூஜைகள் செய்து வந்துள்ளனர். சிவன் கடவுளின் சக்தி பெற தீபக், கிஷாந்த் இருவரையும் நரபலி கொடுத்து விடலாம் என தனலட்சுமி, ரஞ்சிதாவிடம் கூறியுள்ளார். இதனால் தீபக்கும், கிஷாந்தும் புளியம்பட்டியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்றனர். அவர்கள், ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து தனலட்சுமி, ரஞ்சிதா, ராமலிங்கம், இந்துமதி மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளியை சேர்ந்த மாரியப்பன் (42) ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
இந்த வழக்கு தொடர்பாக, ஊடகங்கள் வாயிலாக அறிந்த தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. அதைத்தொடர்ந்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, வழக்கு தொடர்பாக ஆணையத்தின் உறுப்பினர்கள் ராம்ராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோர் கொண்ட தனி அமர்வு அமைத்து, வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பாதிப்புக்குள்ளான சிறுவர்கள், அவர்களது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விதி மீறல்
இதைத்தொடர்ந்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடமும் வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கோப்புகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் ஏதேனும் விதி மீறல், உரிமைகள் மீறல் இருந்தால் அதற்கான அறிக்கையை ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த விசாரணையின்போது, மாவட்ட குழந்தைகள் நல அலகு அலுவலர் பிரியா தேவி, குழந்தைகள் நல அமைப்பு தலைவர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.
5 பேருக்கு தண்டனை
இதுகுறித்து மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ராம்ராஜ் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட குழந்தைகளிடத்தில் நேரடியாக வாக்குமூலம் பெற்றுள்ளோம். அவர்களது தாத்தா, பாட்டி, அத்தை, மாமா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினோம். இதனை அறிக்கையாக ஆணையத்தில் சமர்ப்பிப்போம். கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்றுத்தர போலீசார் உரிய சாட்சியங்களை முறையாக கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம். அதுவரை குழந்தை உரிமைகள் ஆணையம் இந்த வழக்கினை தொடர்ந்து விசாரணை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்