பராமரிப்பு பணியில் ரூ.6½ லட்சம் மோசடி: அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சிசெயல் அலுவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு

2 பேர் மீது வழக்கு

Update: 2021-04-21 22:51 GMT
சேலம்:
பராமரிப்பு பணியில் ரூ.6½ லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேர் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர்
அயோத்தியாப்பட்டணம் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன் (வயது 52). இவர், பேரூராட்சி பராமரிப்பு பணியில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் சமீபத்தில் பேரூராட்சி ஆவணங்களை தணிக்கை செய்தனர். 
அப்போது, குடிநீர் குழாய்களை சீரமைத்தல், பொது செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட மின் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக, அவரது உறவினரின் முகவரியுடன் போலி ரசீது தயாரித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 
மேலும், இல்லாத நிறுவனத்தை இருப்பதாக காட்டி, அதன் பெயரில் பராமரிப்பு பணி செய்ததாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதற்கு எடப்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் உடந்தையாக செயல்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
2 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக கூட்டு சதி, போலி ஆவணம் தயாரித்தல், அதை உண்மை ஆவணமாக பயன்படுத்துதல், நம்பிக்கை துரோகம், மோசடி, அரசு பணம் கையாடல் உள்பட 11 பிரிவுகளில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது நேற்று முன்தினம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்