மும்பை காசநோய் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் கொரோனாவுக்கு பலி சாகும் முன் முகநூலில் உருக்கம்

மும்பை சிவ்ரி காசநோய் பெண் டாக்டர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளார். இவர் சாகும் முன்பு முகநூலில் பதிவிட்ட உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-04-22 05:46 GMT
மும்பை,

மும்பை சிவ்ரி பகுதியில் காசநோய்க்கான அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சீனியர் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் பெண் டாக்டர் மனிஷா ஜாதவ் (வயது51). இவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டாக்டர் மனிஷா ஜாதவ் உயிரிழந்தார். அவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் சாகும் முன்பு டாக்டர் மனிஷா ஜாதவ் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது கடைசி காலை வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இதன்பின்னர் உங்களை நான் சந்திக்க முடியாது. எல்லோரும் கவனமாக இருங்கள். எனது உடல் அழிந்து விடும். ஆனால் ஆன்மா அழியாது என உருக்கமாக கூறியிருந்தார்.

இவர் சாகும் முன்பு வெளியிட்ட உருக்கமான முகநூல் பதிவால் வேதனை அடைந்த ஏராளமானோர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்