உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை-வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

Update: 2021-04-22 17:36 GMT
சிவகங்கை.

சிவகங்கை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உரிமம் ரத்து

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது யூரியா 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 432 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,300 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட்-150 மெட்ரிக் டன் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி உரவிற்பனையாளர்கள் உர விற்பனையினை மேற்கொள்ள வேண்டும். உரங்கள் விற்பனை முனைய கருவி மூலம் அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு உட்பட்டு விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். உரமூடையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு மீறி செயல்படுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

சமூக இடைவெளி

அத்துடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள உரிய நேரங்களில் உரக்கடைகளை திறந்து வைத்து உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையினை மேற்கொள்ள அனைத்து உரம் மற்றும் பூச்சி மருந்து தனியார் விற்பனை நிலையங்களுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உரவிற்பனையாளர்கள் கிருமிநாசினிகளை பயன்படுத்தி உரவிற்பனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தனிநபர் இடைவெளியை விவசாயிகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

சில்லரை உரவிற்பனையாளர்களுக்கு அனுப்பும்பொழுது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும். சில்லரை உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும்பொழுது கட்டாயமாக ஆதார்அட்டை கொண்டு கைரேகை பதிவு செய்த பிறகே உரம் விற்பனை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக் கூடாது.
உரம் தொடர்பான விதிமீறல் புகார்களை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் உர ஆய்வாளர்களிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்