டெம்போவில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அழகியமண்டபம் அருகே டெம்போவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-22 20:22 GMT
அழகியமண்டபம், 
அழகியமண்டபம் அருகே டெம்போவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படை
 குமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் பொருட்களான அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்டவை கேரளாவுக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.
 இதனை தடுக்கும் வகையில் மாவட்ட வருவாய் துறை சார்பில் பறக்கும்படை அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
3 டன் அரிசி பறிமுதல் 
இந்தநிலையில் பறக்கும் படை தனி தாசில்தார் பாபு ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார், டேவிட் ஆகியோர் நேற்று அதிகாலை அழகியமண்டபம் அடுத்த திங்கள்சந்தை-குளச்சல் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் ஒரு டெம்போ சாைலயோரம் நின்று கொண்டிருந்தது.
 உடனே, அதிகாரிகள் டெம்போவை சோதனை செய்ய அதன் அருகில் சென்றனர். அப்போது, அங்கு நின்ற 2 பேர் அதிகாரிகளை கண்டதும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து டெம்போவை சோதனை செய்த போது, அதில் சிறு சிறு மூடைகளில் மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.  
பின்னர், டெம்போவுடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரிசியை உடையார்விளை அரசு கிட்டங்கியிலும், டெம்போவை கல்குளம் தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ யாருடையது?, தப்பியோடிவர்கள் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்