நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு ஒரே விலையாக ரூ.150 நிர்ணயிக்க வேண்டும்; மும்பை ஐகோர்ட்டில் வழக்கு

நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே விலையாக ரூ.150 நிர்ணயிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-29 00:14 GMT

மாறுபட்ட விலை

கொரோனா வேகமாக பரவிவருவதை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்தநிலையில் மத்திய அரசுக்கு ரூ.150-க்கு கொரோனா தடுப்பூசிகளை விற்றுவந்த சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் விலை பட்டியலை வெளியிட்டன.

இதன்படி சீரம் நிறுவனம், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 எனவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விலையை நிர்ணயித்து உள்ளது.

இதேபோல, பாரத் பயோடெக் நிறுவனம் தனது தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் விலை ரூ.600 ஆகவும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.1,200 ஆகவும் விலை நிர்ணயித்துள்ளது.

பொதுநலன் வழக்கு

இந்த மாறுப்பாட்ட விலை பட்டியலை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி என்பது அத்தியாவசிய பொருட்களாக பார்க்கப்படுகிறது. இதன்பொறுப்பை தனியாரிடம் விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தடுப்பூசி தயாரிக்கும் 2 நிறுவனங்களும் மக்களின் அச்சத்தை பணமாக்க முயற்சிக்கின்றன. மக்களின் உடல்நலத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கடமை இருக்கிறது. இதில் வேறுபாடு காட்ட முடியாது. தனியார் மருத்துவமனைகளை போல மாநில அரசுகளும் வெளிச்சந்தையில் தடுப்பூசியை வாங்க வேண்டும் என மத்திய அரசு கூறுவது சரியல்ல.

ஆதலால், தடுப்பூசிக்கு நாடு முழுவதும் ரூ.150 என ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்