கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்காது

கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்காது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2021-04-30 19:51 GMT
மந்திரி சுதாகர்.
பெங்களூரு: கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்காது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்களுக்கு தெரிவிக்கப்படும்

மே 1-ந் தேதி (அதாவது இன்று) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக நாங்கள் சீரம் நிறுவனத்திடம் 1 கோடி டோஸ் தடுப்பூசி வழங்க கோரி பணி ஆணை வழங்கியுள்ளோம். 

அந்த தடுப்பூசி வந்ததும் அதுபற்றி மக்களுக்கு தெரிவிக்கப்படும். அதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி மையத்திற்கு வர வேண்டாம். இந்த வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை(இன்று) தொடங்காது. அதனால் நமக்கு தடுப்பூசி கிடைக்கும் என்று நினைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

 தேவையான தடுப்பூசி கர்நாடகத்திற்கு வந்ததும் இதுபற்றி உரிய தகவல் தெரிவிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும் என்று என்னால் கூற முடியாது. இதற்கு சில வாரங்கள் ஆகலாம். ஆனால் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று சரியாக சொல்ல முடியாது. ஆனால் நாளை (இன்று) 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

முடிந்தவரை தடுப்பூசிகளை விரைவாக பெற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கர்நாடகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளோம். அதனால் அதுபற்றி பொதுமக்கள் குழப்பம் அடைய வேண்டாம். அதே நேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட எந்த பிரச்சினையும் இல்லை.

 போதுமான அளவுக்கு தடுப்பூசி இருப்பில் உள்ளது. கர்நாடகத்திற்கு 99 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்தது. அதில் 95 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1.4 சதவீத டோஸ் மட்டுமே விரயமாகியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக குறைவு. 

கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மக்கள் இந்த தொற்று நோய் விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. மக்கள் படும் துன்பங்களை ஊடகங்கள் காட்டுகின்றன. அதை பார்த்தாவது மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்