தாயார் இறந்த 6-வது நாளில் கொத்தனார் படுகொலை

முப்பந்தல் அருகே தாயார் இறந்த 6-வது நாளில் கொத்தனார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-30 19:53 GMT
ஆரல்வாய்மொழி:

முப்பந்தல் அருகே தாயார் இறந்த 6-வது நாளில் கொத்தனார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆண் பிணம்

முப்பந்தல் அருகே கண்ணுபொத்தை பகுதியில் லட்சுமிபுது குளத்தின் கரையையொட்டி நேற்று ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ஆரல்வாய்ெமாழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவரின் கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. இதனால், அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், இறந்தவர் யார்? என்ற விவரம் முதலில் தெரியாமல் இருந்தது. 
இதையடுத்து போலீசார் இறந்தவரை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

கொத்தனார்

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஆரல்வாய்மொழி அருகே தெற்குகுமாரபுரம், மன்னராஜா கோவில் தெருவை சேர்ந்த கொத்தனார் ஞானசேகர் (வயது 40) என்பது தெரியவந்தது. இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ஞானசேகரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் நாங்குநேரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின்பு ஞானசேகர் உறவினர்களுடன் வசித்து வந்தார்.  
இவர் நேற்று முன்தினம் மாலை 7 மணி வரை வீட்டில் இருந்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு எங்கேயோ நடந்து சென்றுள்ளார். பின்னர் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. காலையில் அவர் வந்து விடுவார் என்று உறவினர்கள் எண்ணியுள்ளனர். ஆனால் காலையில் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேட ஆரம்பித்தனர். 
இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மேற்கண்ட விவரங்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. 

 மோப்ப நாய்

சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும்,  மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது சோதனை நடத்தப்பட்டு. நாய் இறந்தவர் உடலை மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து நேராக ஓடி பைபாஸ் சாலையை கடந்து குமாரபுரம் செல்லும் சாலைக்கு வந்து ஊருக்குள் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஞானசேகர் முன்விரோதம் காரணமாக அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
கொலை செய்யப்பட்ட ஞானசேகரின் தாயார் சரஸ்வதி கடந்த 6 நாட்களுக்கு முன்பு இறந்தார். 
தாயார் இறந்த 6 -வது நாளில் கொத்தனார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்