எடியூரப்பாவின் முடிவுக்கு, மந்திரி ஆனந்த் சிங் எதிர்ப்பு

ஜிந்தால் நிறுவனத்திற்கு அரசு நிலம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் எடியூரப்பாவின் முடிவுக்கு மந்திரி ஆனந்த்சிங் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Update: 2021-04-30 19:58 GMT
மந்திரி ஆனந்த் சிங்.
பல்லாரி: ஜிந்தால் நிறுவனத்திற்கு அரசு நிலம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் எடியூரப்பாவின் முடிவுக்கு மந்திரி ஆனந்த்சிங் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

எதிர்ப்பு 

பல்லாரியில் 3,667 ஏக்கர் அரசு நிலத்தை ஜிந்தால் நிறுவனத்திற்கு, மாநில அரசு விற்பனை செய்து உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எடியூரப்பாவின் முடிவுக்கு அவரது மந்திரிசபையில் உள்ள மந்திரி ஆனந்த்சிங்கே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

நான் காங்கிரசில் இருந்த போது ஜிந்தால் நிறுவனத்திற்கு அரசு நிலம் விற்பனை செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போதும் எடியூரப்பாவின் முடிவுக்கு எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன். ஜிந்தால் நிறுவனத்திற்கு அரசு நிலம் விற்பனை செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும். அடுத்த முறை மந்திரிசபை கூட்டம் நடக்கும் போது எனது எதிர்ப்பை தெரிவிப்பேன். 

படுக்கைகள் பெற நடவடிக்கை 

பல்லாரியில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இதனால் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிக டாக்டர்கள், செவிலியர்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள். அரசிடம் பேசி பல்லாரி மாவட்டத்திற்கு 50 வென்டிலேட்டர் படுக்கைகளை பெற நடவடிக்கை எடுப்பேன். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்