சட்டசபையை கலைத்துவிட்டு எடியூரப்பா தேர்தலை சந்திக்க சித்தராமையா வலியுறுத்தல்

நகர உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்து இருப்பதால், சட்டசபையை கலைத்துவிட்டு முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

Update: 2021-04-30 20:30 GMT
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா.
பெங்களூரு: நகர உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்து இருப்பதால்,  சட்டசபையை கலைத்துவிட்டு முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு மீது கோபம்

கர்நாடகத்தில் 10 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பல்லாரி மாநகராட்சி உள்பட பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் புரசபைகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா அரசை மக்கள் நிராகரித்துள்ளனர். இந்த பா.ஜனதா அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. 

கொரோனா பரவலை தடுக்க இந்த அரசு உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மக்களின் வாழ்க்கையுடன் இந்த அரசு விளையாடுகிறது. அதனால் நகர உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். மக்கள் இந்த அரசு மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொண்டர்களுக்கு நன்றி

அதனால் முதல்-மந்திரி எடியூரப்பா சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசாருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைத்த எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளவர்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்