வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் உரிமையாளர்கள் மனு

வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உடற்பயிற்சி கூடங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2021-04-30 21:15 GMT
சேலம்:
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உடற்பயிற்சி கூடங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
உடற்பயிற்சி கூடங்கள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் சலூன் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 
 அதன்படி சேலம் மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன. இதனால் உடற்பயிற்சி கூடங்களை நடத்திவரும் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தற்போது வேலையிழந்துள்ளனர்.
கலெக்டரிடம் கோரிக்கை
இந்தநிலையில், சேலம் மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் சார்பில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உடற்பயிற்சி கூடங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று உடற்பயிற்சி கூடங்களின் உரிமையாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக உடற்பயிற்சி கூடங்கள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள், பயிற்சியாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் உடற்பயிற்சி செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். லாபம் நோக்கத்துடன் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் தான் உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறோம்.
செயல்பட அனுமதி
ஏற்கனவே கடந்த ஆண்டு 5 மாதங்கள் மூடப்பட்டு இருந்ததால் வாடகை, மின் கட்டணம், வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்டவையால் கடும் சிரமத்திற்கு ஆளாகினோம். தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக மீண்டும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். 
 எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்களை திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் அரசின் விதிகளுக்கு உட்பட்டு உடற்பயிற்சி கூடங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்