45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் மத்திய அரசு தோல்வி மந்திரி அசோக் சவான் குற்றச்சாட்டு

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளதாக காங்கிரஸ் மந்திரி அசோக் சவான் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2021-05-01 12:14 GMT
மும்பை, 

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனினும் போதிய மருந்து கையிருப்பு இல்லாததால் மராட்டியத்தில் இது தாமதமாகவே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளதாக மாநில காங்கிரஸ் மந்திரி அசோக் சவான் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளது. எனவே தான் அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை மாநில அரசுகளிடம் கொடுத்து உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு மருந்து கொடுக்காத நிலையில், போதிய மருந்து வந்தவுடன் தான் அவர்களுக்கு தடுப்பூசி போட மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது.

மத்திய அரசு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த தேவையான தடுப்பூசி மருந்தையாவது தரவேண்டும். தடுப்பு மருந்து சரியான நேரத்தில், போதிய அளவு கொடுக்கப்பட வேண்டும். 3-வது அலை அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், தடுப்பு மருந்து சப்ளையில் தாமதம் ஏற்படுவது சரியானது அல்ல’’ என்றார்.

மேலும் செய்திகள்