மருந்து தட்டுப்பாடு எதிரொலி: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை

மருந்து தட்டுப்பாடு எதிரொலியாக, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கவில்லை.

Update: 2021-05-01 16:29 GMT
விழுப்புரம், 

நாட்டில் உக்கிரமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 


இதனிடையே 3-ம் கட்டமாக 18 வயதுக்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நேற்று முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தேவையான தடுப்பூசிகளை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். இதற்காக தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் மையங்களிலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடிவு செய்திருந்தனர். 


ஏமாற்றம்

ஆனால் தடுப்பூசி மருந்துகள் போதுமான அளவில் வராமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏற்கனவே முதல்முறை தடுப்பூசி செலுத்தியவர்கள் 2-ம்முறை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக காத்திருப்பில் உள்ளதால் கையிருப்பில் உள்ள தடுப்பூசி மருந்துகளை அவர்களுக்கு முன்னுரிமை அளித்து செலுத்தப்பட்டது. 

அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக முன்பதிவு செய்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும் தடுப்பூசி போடக்கூடிய மையத்திற்கு சென்ற நிலையில் அங்கு மருந்து தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தடுப்பூசி போடும் பணி

 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சுகாதார கிடங்கில் தற்போது கையிருப்பாக இருக்கும் 11,560 தடுப்பூசி மருந்துகளை முதல்முறை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை அளித்து 2-ம்முறையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்க  முடியவில்லை. இதுபற்றி மாநில சுகாதாரத்துறை தலைமையகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளோம்.

 இனி வரும் நாட்களில் அனுப்பப்படும் கூடுதல் தடுப்பூசி மருந்துகளை பொறுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்