கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 423 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 423 பேர் பாதிப்பு

Update: 2021-05-01 23:45 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான நிலையில், ஒரே நாளில் 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 54 வயது ஆண். காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் கடந்த 19-ந் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 28-ந் தேதி இறந்து விட்டார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
423 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 422 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 666 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 3 ஆயிரத்து 149 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள், செய்தி மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதில் 2 தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
அதன்படி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 29-ந் தேதி வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 1,559 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
======

மேலும் செய்திகள்