தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

தூத்துக்குடியில், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

Update: 2021-05-02 13:05 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில், மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தபால் வாக்குகளில் முத்திரை பிரச்சினையால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வேன்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
சலசலப்பு
தொடர்ந்து காலை 8 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. தபால் வாக்குகள் அனைத்தும் மேசைஜக்கு 500 வாக்குகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் எண்ணப்பட்டன. அப்போது சில தபால் வாக்குகளில் சரியாக முத்திரையிடப்படாமல் இருப்பதாக கூறி சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறையில்  இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தயாராக இருந்த அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை தொடங்கினர். அப்போது எந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொன்றாக முகவர்களிடம் காண்பித்தனர்.
சமூக இடைவெளிக்கு சிக்கல்
பல தொகுதிகளில் சிறிய இடங்களாக இருந்ததால் முகவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பத்தில் சிக்கல் நிலவியது. வேறு வழியின்றி முகவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டு வாக்கு எண்ணிக்கை விவரங்களை கண்காணித்து வந்தனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று முககவசம் அணியாதவர்களுக்கு, இலவசமாக முககவசம், கிருமிநாசினிகள் வழங்கியும் கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்