முழு ஊரடங்கு; நெல்லையில் வெறிச்சோடிய சாலைகள்

முழு ஊரடங்கால் நெல்லையில் சாலைகள் வெறிச்சோடின.

Update: 2021-05-02 22:09 GMT
நெல்லை, மே:
முழு ஊரடங்கு காரணமாக நெல்லை மாநகரம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதன்படி தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக நெல்லையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள், டாஸ்மாக் கடைகள், டீக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

வெறிச்சோடிய நெல்லை மாநகரம்

நெல்லை டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட், மகாராஜா நகர் உழவர் சந்தை மற்றும் தற்காலிக காய்கறி கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து கடை வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி மேம்பாலம், ஈரடுக்கு மேம்பாலம், வண்ணார்பேட்டை மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பாலங்களும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்தன. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், சமாதானபுரம், மேலப்பாளையம், பெருமாள்புரம், வி.எம்.சத்திரம், பழைய பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் நிலையங்கள் பயணிகளின்றி வெறிச்சோடியது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் நெல்லை மாநகரமே அமைதியாக இருந்தது.

அபராதம்

நெல்லை மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் மருந்து கடைகள், பால் கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்து இருந்தன. ஒரு சில இடங்களில் ஓட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பார்சல் வழங்கப்பட்டது.
முழு ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பிடித்து விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரு சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதேபோல், அம்பை, சேரன்மாதேவி, ராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்