முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

முழு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

Update: 2021-05-03 00:32 GMT
ஈரோடு
முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
சிவகிரி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு ஊரடங்கை அறிவித்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பால் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. பஸ் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
சிவகிரி பகுதியில் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. சிவகிரி புதிய பஸ் நிலையம், தியாகி திருப்பூர் குமரன் சிலை, தியாகி தீரன் சின்னமலை சிலை, தினசரி மார்க்கெட் மற்றும் சிவகிரி சுற்றுப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரில் காலை முதல் மாலை வரை எந்தவித வாகனப் போக்குவரத்துமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஓட்டல்கள், டீக்கடை, நகைக்கடை, மளிகைக்கடை, பூக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடை, பால் பூத் மற்றும் மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருந்தன. மேலும் அந்தியூர் போலீசார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் தட்டக்கரை வனப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்தியூர் வாரச்சந்தை திங்கட்கிழமைதோறும் நடைபெறும். இங்கு விற்பனைக்காக சேலம், நாமக்கல், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பருப்பு வகைகள், காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களை ஞாயிற்றுக்கிழமை அன்றே லாரிகள் மூலம் கொண்டு வருவார்கள். முழு ஊரடங்கு காரணமாக நேற்று காய்கறிகள், மளிகை பொருட்கள் அனைத்தும் அதிகாலை 5 மணிக்கே வந்து இறங்கின. அத்தாணி, ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளிலும் எந்தவித வாகன போக்குவரத்தும் இன்றி ரோடுகள் வெறிச்சோடிக் கிடந்தன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்