குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

அய்யன்கொல்லியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2021-05-03 01:14 GMT
பந்தலூர்

அய்யன்கொல்லியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில் இருந்து மழவன்சேரம்பாடி வழியாக கொளப்பள்ளிக்கு தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலையானது கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் போக்குவரத்துக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் தினமும் பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த சாலையானது பல்வேறு இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பந்தலூர் தாலுகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வாகன ஓட்டிகள் அவதி

இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 
இதனால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலையில் இரவில் செல்லும் இருசக்கர வாகனங்கள் குழிக்குள் இறங்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. 

மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மீது வாகனங்கள் குழியில் தேங்கிய தண்ணீரை தெளித்துவிட்டு செல்வதால் அவர்கள் அவதி அடைகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்கள்.

மேலும் செய்திகள்