சுவாச பிரச்சினையால் அவதிப்படும் ‘ரிவால்டோ’ யானை

மசினகுடி பகுதியில் சுவாச பிரச்சினையால் அவதிப்படும் ரிவால்டோ யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2021-05-03 01:15 GMT
கூடலூர்

மசினகுடி பகுதியில் சுவாச பிரச்சினையால் அவதிப்படும் ரிவால்டோ யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

‘ரிவால்டோ’ யானை

கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுயானை ஒன்று சுற்றித்திரிகிறது. மேலும் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டு வருகிறது. வனத்துக்குள் செல்லாமல் மசினகுடி, வாழைத்தோட்டம், மாவனல்லா, மாயாறு, தொட்டிலிங்க் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது.

இதனால் மக்களுடன் பழகும் நிலைக்கு யானை மாறியது. ரிவால்டோ என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி ஊருக்குள் முகாமிட்டுள்ள அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் பலன் ஏற்படவில்லை.

சுவாச பிரச்சினை

இந்த நிலையில் ரிவால்டோ யானைக்கு சுவாச பிரச்சினை இருப்பது தெரியவந்து உள்ளது. மாவனல்லா பகுதியில் இருந்த அந்த யானைக்கு பழங்கள் கொடுத்தவாறு முதுமலைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் முயற்சி செய்தனர். 

அப்போது வனத்துறையினர் வழங்கிய பழங்களை தின்றவாறு பல கிலோ மீட்டர் தூரம் யானை நடந்து சென்றது. ஆனால் முதுமலை புலிகள் காப்பக எல்லை வரை சென்ற பிறகு மீண்டும் மசினகுடி பகுதிக்குள் ஓடிச்சென்றது. இதனால் வனத்துறையினரின் கடைசி கட்ட முயற்சியும் தோல்வியடைந்தது. 

கண்காணிப்பு

இதனிடையே ரிவால்டோ யானையை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அதனை பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரிவால்டோ யானை மசினகுடி பகுதியில் பல மாதங்களாக சுற்றி வருகிறது. 

ஆனால் சுவாச பிரச்சினையால் அவதிப்படும் அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். மேலும் ரிவால்டோ யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

சிகிச்சை

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சில காரணங்களால் ரிவால்டோ யானையை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 

இருப்பினும் சுவாச பிரச்சினையால் அவதிப்படுவதால் மசினகுடி பகுதியில் வைத்து யானைக்கு இன்னும் சில தினங்களில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்