மை தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ உடல் கருகி தொழிலாளி பலி 8 மணி நேரம் போராடி தீ அணைப்பு

மை தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உடல் கருகி தொழிலாளி பலியானார். சுமார் 8 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

Update: 2021-05-03 11:04 GMT
மும்பை, 

நவிமும்பை துர்பே அம்பேத்கர் நகர் பகுதியில் மை தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் அச்சிடும் மை, இரும்பில் வர்ணம் பூசும் மைகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று காலை 8.15 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 12 வாகனங்கள் மற்றும் 12 மெகா தண்ணீர் டேங்குகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 8 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவர் ஆலையில் பணி புரிந்துவந்த தொழிலாளி என்பது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அவரது அடையாளம் தெரியவில்லை. போலீசார் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்