முழு ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம்

திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2021-05-03 16:17 GMT
திருச்சி, 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மாநகரின் முக்கிய சாலையான என்.எஸ்.பி.ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவீதி, சிங்காரத்தோப்பு, சத்திரம் பஸ்நிலையம், மத்திய பஸ்நிலையம், உறையூர், தில்லைநகர், சாஸ்திரிரோடு, ஜங்ஷன், கே.கே.நகர், எடமலைப்பட்டிபுதூர் என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்துகடைகள், பாலகங்கள் மட்டுமே திறந்து இருந்தன.

போலீசார் கண்காணிப்பு

டீக்கடைகள், ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. ஒரு சில ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாநகரில் பல இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மருத்துவமனைகள், மருந்துக்கடைகளுக்கு செல்பவர்களிடம் உரிய ஆதாரங்களை வாங்கி பார்த்தபிறகே அனுப்பி வைத்தனர்.

வாரச்சந்தை ரத்து

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தா.போட்டை, முசிறி பகுதிகளில் நகர பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, உப்பிலியபுரம், கொள்ளிடம் டோல்கேட், கொள்ளிடம் ஆற்றுப்பாலம், துறையூர், ஏர்குடி சாலை, கோவிந்தாபுரம், தொட்டியம், காட்டுப்புத்தூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, திருவெறும்பூர், கல்லக்குடி, சோமரசம்பேட்டை, புள்ளம்பாடி மற்றம் அதன் சுற்றுப்பகுதியில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. நேற்று நடைபெற இருந்த வாரச்சந்தையும், கோவில்களில் நடைபெற இருந்த திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்