கடலூர் மாவட்டத்தில் 118 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிட்ட 118 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

Update: 2021-05-03 16:43 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் (தனி), குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி (தனி), விருத்தாசலம் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று, நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த 9 தொகுதிகளிலும் 136 பேர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் களம் கண்டனர். அவர்களில் பிரதான கட்சியாக போட்டியிட்ட 2 கட்சிகளை தவிர மற்ற கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

118 பேர் டெபாசிட் இழந்தனர்

அதாவது நோட்டா தவிர மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற வேண்டும். அப்படி வாக்குகள் பெறாத வேட்பாளர்கள் டெபாசிட் (வைப்புத்தொகை) இழந்ததாக கருதப்படும். அதன்படி மாவட்டத்தில் 118 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். கடலூரில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர மற்ற 13 வேட்பாளர்களும், சிதம்பரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர மற்ற 9 வேட்பாளர்களும், புவனகிரியில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர 12 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர்.
நெய்வேலியில் தி.மு.க., பா.ம.க. தவிர மற்ற 10 வேட்பாளர்களும், பண்ருட்டியில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர மற்ற 13 வேட்பாளர்களும், காட்டுமன்னார்கோவிலில் வி.சி.க., அ.தி.மு.க.வை தவிர மற்ற 11 வேட்பாளர்களும், குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர மற்ற 10 வேட்பாளர்களும், திட்டக்குடியில் தி.மு.க., பா.ஜ.க.தவிர மற்ற 13 வேட்பாளர்களும், விருத்தாசலத்தில் காங்கிரஸ், பா.ம.க. தவிர மற்ற 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
----

மேலும் செய்திகள்