விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 வாலிபர்கள் சாவு மேலும் 396 பேருக்கு நோய் தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 வாலிபர்கள் இறந்தனர். மேலும் 396 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-03 17:43 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19,642 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 123 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 17,370 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய வாலிபரும், திண்டிவனம் ஜக்காம்பேட்டையை சேர்ந்த 35 வயதுடைய வாலிபரும் கடந்த 1-ந் தேதியன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இவர்களின் இறப்பு விவரம் நேற்று விழுப்புரம் மாவட்ட கொரோனாவுக்கு இறந்தவர்களின் பட்டியலோடு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 123-ல் இருந்து 125 ஆக உயர்ந்துள்ளது.

396 பேருக்கு நோய் தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் ஒரே நாளில் 396 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,038 ஆக உயர்ந்துள்ளது.இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,579 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 2,334 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்