மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

கோடை உழவு செய்வதன் மூலம் மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்று டி.கல்லுப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-03 18:05 GMT
பேரையூர்,மே.-
கோடை உழவு செய்வதன் மூலம் மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்று டி.கல்லுப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அவசியம்
தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்வது மிகவும் அவசியமாகும். முதல் கட்டமாக வயலில் இரும்பு கலப்பை கொண்டு அல்லது டிராக்டர் வாயிலாக குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதிபட உழவு செய்ய வேண்டும். இதனால் புல் பூண்டுகள் வேர் அறுபட்டு காய்ந்து கருகிவிடும். கடின தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து சீராகி விடும். அதனால் பயிர்களுக்கு உரம் சமச்சீராக கிடைக்கும்.
மக்காச் சோளத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு, நிலக்கடலையை தாக்கும் சிவப்பு கம்பளி புழு போன்றவை மண்ணுக்குள் சென்று கூண்டு புழுவாக மாறி வளர்ந்து இருக்கும். இவை உழவின் போது மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டுவரப்பட்டு பறவைகளால் பிடித்து தின்னப்பட்டு அழிக்கப்படுகிறது.
அதிக மகசூல்
மேலும் களைச் செடிகள் முற்றிலும் அழிக்கப்படும். மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது. மழைநீர் பூமிக்குள் சென்று மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. எனவே கோடை காலத்தில் பெய்யும் மழையை பயன்படுத்தி உழவு செய்து பூச்சி தாக்குதலை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்