கும்மிடிப்பூண்டி அருகே, கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் போராட்டம் - உணவு சுவையாக இல்லை என புகார்

கும்மிடிப்பூண்டி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதி கோரி நோயாளிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-04 10:25 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பபட்டவர்களுக்கான சிகிச்சை மையம் கடந்த வாரம் துவக்கப்பட்டது. இங்கு கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி தாலுகாவை சேர்ந்த மொத்தம் 126 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு மேற்கண்ட மையத்தில் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவு நேரத்திற்கு வழங்கப்படுவது இல்லை என்றும், அப்படி வழங்கப்பட்டாலும் சுவையாக இருப்பது இல்லை என்றும் புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அங்கு சாப்பிடாமல் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி ஸ்டாலின், வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிகிச்சை மைய வளாகத்திலேயே போதிய டாக்டர்கள் பணி அமர்த்தப்படுவதாகவும், உணவு தயாரிக்கும் வசதியை அங்கேயே ஏற்படுத்தி தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் வழங்கப்படும் உணவு சுவையாக இருப்பதாகவும், கொரோனா தொற்று உள்ளதால் நோயாளிகளுக்கு சுவையை உணர முடியவில்லை எனவும் டாக்டர் கோவிந்தராஜ் அவர்களிடம் எடுத்துரைத்தார். இதனால் சமரசம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்